முதலீட்டு திட்டம் என கூறி ரூ.66 கோடி மோசடி செய்த பெண்ணுக்கு போலீஸ் வலை!




ஓமனில், பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதாக, பணம் வசூல் செய்த இந்தியப் பெண், 66 கோடி ரூபாயுடன், தலை மறைவாகி விட்டார். ஓமன் நாட்டில், இந்தியர்கள் ஏராளமானோர் வங்கிகள், நிதி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் என பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அவர்களிடம் தன்னை, "முதலீட்டாளர்களுக்கு யோசனை கூறும் ஆலோசகர்' என, அறிமுகப்படுத்திக் கொண்டார், இந்தியாவை சேர்ந்த...

சாதனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண். அத்துடன் அவர்களிடம் அரசுத் துறையின் போலியான ஆவணங்களை காண்பித்து பல்வேறு திட்டங்களுக்கு தான் பொறுப்பு வகித்து வந்ததாகவும் எல்லோரையும் சாதனா நம்ப வைத்தார். பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய தனக்கு பெருமளவில் பணம் தேவைப்படுவதாகவும் அவ்வாறு பணம் கொடுப்பவர்களுக்கு உரிய வட்டி தரப்படும் எனக் கூறி பலரிடம் பணம் வசூல் செய்தார்.



அதற்கு உரிய வட்டியையும் சில மாதங்கள் வரை கொடுத்து வந்தார். இதனால், சாதனா மீது மற்றவர்களுக்கும் நம்பிக்கை ஏற்படவே ஏராளமானோர் அவரிடம் வட்டிக்காக பணம் கொடுத்து வந்தனர். இந்நிலையில், 66 கோடி ரூபாய் பணத்துடன் சாதனா தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது, எங்களை ஏமாற்றிய அந்த சாதனா, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளில் தவறாமல் வழிபாட்டு தலங்களுக்கு செல்வார்.



அவரது நடவடிக்கைகளை நம்பி நாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அவரிடம் கொடுத்து ஏமாந்தோம். அவர் இப்போது மங்களூரில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எங்களை நம்ப வைத்து மோசடி செய்த, சாதனாவை கைது செய்ய சர்வதேச போலீசின் உதவியை நாட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்