தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கருகில் சுற்றித் திரிந்த இலங்கைப் பெண்ணொருவரை பாதுகாப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டை, போயஸ் கார்டன் பகுதியில் நேற்று முன்தினம் 53 வயதான பெண் ஒருவர் சுற்றிக் கொண்டிருந்தார்.
மாலையில் குறித்த பெண் தமிழக முதல்வர் வீடு அருகில் சென்று கடமையிலிருந்த பாதுகாப்பு பொலிசாரையும் மீறி, முதல்வர் வீடு இருக்கும் பகுதியில் நுழைய முயன்றுள்ளார்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார், அப்பெண்ணைப் பிடித்து தேனாம்பேட்டை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்டகுறித்த பெண், இலங்கையில் கொழும்பு, முகமதியாபுரம், மண்டல் பட்டு ரோட்டைச் சேர்ந்த பரிமளா காந்தி என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையில் இருந்து, கடந்த ஜூலை மாதம், இந்தியாவிற்குச் சுற்றுலா வந்த இவர், ஒரு மாதத்திற்கான சுற்றுலா விசா காலம் முடிந்த நிலையில், சென்னையில் தங்கியுள்ளார்.
விசா காலம் முடிந்தும் சென்னையில் தங்கினால் பொலிசாரால் கைது செய்யப்படுவோம் என்பதால் முதல்வரிடம் விசாவை நீட்டிக்கக் கோரிக்கை விடுக்க, வந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இதையடுத்து, பரிமளா காந்தியை மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தேனாம்பேட்டை பொலிசார் தங்க வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன